">

Please wait...



விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய....
தமிழ்மொழி முதலிடம் | label other | access_time 21st Fri, Feb 2020

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.


இந்நிலையில், போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.

இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ள இந்த போட்டியின் முக்கியத்துவம் என்ன? இது மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும்? இந்த போட்டியில் தமிழ்மொழி முதலிடம் பெறுவதற்கு வித்திட்டவர்கள் யார், யார்? என்று இந்த கட்டுரை அலசுகிறது.

எதற்காக இந்த போட்டி?
நீங்கள் கூகுள் உள்ளிட்ட எந்த தேடுபொறியில் எந்தவொரு விடயத்தை தேடினாலும் பெரும்பாலான சமயங்களில் முதல் முடிவாக விக்கிப்பீடியாவே காட்டப்படும். கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்கும் விக்கிப்பீடியாவில் உலகின் பெரும்பாலான மொழிகளில் எண்ணற்ற தலைப்புகளில் கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.

துறைசார் வல்லுநர்கள் முதல் பொது மக்கள் வரை யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியாவில் புதிய தலைப்பில் கட்டுரை படைக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் மேலதிக தகவல்களை சேர்க்கலாம். அவை தக்க வழிமுறைகளுக்கு பின்னர் பதிப்பிக்கப்படும்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விக்கிமீடியா - கூகுள் இணைந்து நடத்தும் இந்த போட்டியின் முக்கிய நோக்கமே, குறிப்பிட்ட காலகட்டத்தில் இணையத்தில் தமிழ் மொழியில் அதிகளவில் உள்ளடக்கங்களை உருவாக்குவதே என்று கூறுகிறார் வேங்கைத் திட்டம் 2.0 குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மென்பொறியாளருமான நீச்சல்காரன் என்று அறியப்படும் இராஜாராமன்

"தமிழில் வேங்கைத் திட்டம் 2.0 என்றும் ஆங்கிலத்தில் டைகர் என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியானது கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. ஒருபுறம், விக்கிப்பீடியாவில் எழுவது குறித்து சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், மற்றொரு புறம் எழுத ஆர்வம் இருந்தும் அதற்கு வசதியில்லாத சுமார் 50 பேர் விண்ணப்பத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மடிக்கணினி மற்றும் இணைய வசதி ஆகியவை இந்த திட்டத்தின் வாயிலாக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது."

வெற்றி சாத்தியமானது எப்படி?
2018-2019இல் நடைபெற்ற முதலாமாண்டு போட்டியில், தொடக்கம் முதலே அதிக கட்டுரைகள் எழுதுவதில் இந்திய மொழிகளுக்கிடையே முன்னிலையில் இருந்து வந்த தமிழ் மொழியை, கடைசி கட்டத்தில் பஞ்சாபி மொழி பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பெற்றது. அதே போன்று, இந்த ஆண்டும் தமிழ் - பஞ்சாபி ஆகிய மொழிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்று நீச்சல்காரனிடம் கேட்டோம்.

"முதலாம் ஆண்டில் கடைசி நேரத்தில் வெற்றியை இழந்தது தமிழ் விக்கிப்பீடியா ஆர்வலர்களுக்கிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, முதலாம் ஆண்டை போலல்லாமல் இந்த ஆண்டு போட்டியில் திட்டமிட்டு செயல்பட முற்பட்டோம். அந்த வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்துவது, எழுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவது, ஊக்கமளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அதுமட்டுமின்றி, எதிர்பாராத வகையில், சில தனிப்பட்ட நபர்கள் வியப்பளிக்கும் வகையிலான பங்களிப்பை அளித்ததே இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம்," என்று அவர் கூறுகிறார்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போட்டியின் இறுதி முடிவுக்கு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 2,959 கட்டுரைகளுடன் தமிழ் மொழி முதலிடமும், 1768 கட்டுரைகளுடன் பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்) இரண்டாமிடமும், அடுத்தடுத்த இடங்களை பெங்காலி, உருது, சந்தாளி, இந்தி உள்ளிட்ட மொழிகளும் பெற்றன. இந்தியாவை பொறுத்தவரை இணையத்தில் அதிக உள்ளடக்கங்களை கொண்ட மொழியாக விளங்கும் இந்தியில் 417 கட்டுரைகளை 26 பேர் படைத்திருந்த நிலையில், தமிழ் மொழியில் அதைவிட 2,542 அதிக கட்டுரைகளை 62 பேர் படைத்தனர்.

கீழடி தமிழின் தொன்மை என்றால், எதிர்காலம் எதிலே இருக்கிறது?
"நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
முதலிடம் என்ற ஒற்றை நோக்கத்திற்காக எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டதால் இந்த போட்டிக்காக படைக்கப்பட்ட உள்ளடக்கங்களின் தரம் பாதிக்கப்பட்டதா என்று அவரிடம் கேட்டபோது, "இந்த போட்டியின் நோக்கமே காலத்திற்கும் இணையத்தில் நிலைத்து நிற்கும் நம்பத்தகுந்த உள்ளடக்கங்களை படைப்பதுதான். எனவே, இதை உறுதிசெய்யும் வகையில் போட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. அதாவது, இந்த போட்டியில் பங்குபெறுபவர்கள் எந்தெந்த தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை படைக்கலாம் என்ற பரிந்துரையை கூகுள் நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கலந்துரையாடி முடிவு செய்தோம்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு கட்டுரை குறைந்தபட்சம் 300 சொற்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. மேலும், கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டாது; பதிப்புரிமை சிக்கல்கள் இருக்கக் கூடாது. ஒரு ஒருங்கிணைப்பாளர் எழுதியதை மற்றொருவர் சரிபார்க்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் கவனமாக பின்பற்றப்பட்டன."

ஏன் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும்?
படத்தின் காப்புரிமைSUSARO
இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கும் பலருக்கும் ஏன் விக்கிப்பீடியா எனும் பன்னாட்டு இணையதளத்தில் தமிழை வளர்த்தெடுக்க வேண்டும்? தமிழுக்கென தனியே இணையதளத்தை உருவாக்க முடியாதா? போன்ற கேள்விகள் எழக் கூடும். இதுகுறித்து நீச்சல்காரனிடம் கேட்டபோது, "கணித்தமிழை வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பலருக்கும் அடிக்கடி எழும் கேள்வி இதுதான். இதை செயற்படுத்துவதற்காக இதுவரை இரண்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு அவை பலனளிக்காமல் முடிவுற்றன. இதுபோன்ற மிகப் பெரிய முன்னெடுப்புகளுக்கு பங்களிக்க திரளான தன்னார்வலர்கள் தயாராக இருந்தாலும் கூட, அரசின் ஆதரவு இன்றிமையாதது. ஒரு முயற்சியின் தொடக்கத்தில் கிடைக்கும் அரசின் ஆதரவு நிலைத்து நிற்பதில்லை. எனவே, இதுபோன்ற சமயத்தில் ஏற்கனவே பல்வேறு உலக மொழிகளில் சிறந்து விளங்கும் விக்கிப்பீடியாவை தமிழ் மொழியில் வளர்த்தெடுப்பதற்கு கூகுள் போன்ற நிறுவனங்களும் உதவி செய்வதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

எதிர்காலத்தில் விக்கிப்பீடியாவை போன்று தமிழ் மொழிக்கென தனிப்பட்ட இணையதளத்தை உருவாக்கும்போது ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள உள்ளடகங்களையும் பயன்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் எவ்வித கட்டுப்பாடுமின்றி எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பலரும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியின் உள்ளடக்கத்தை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவேளை, விக்கிப்பீடியா போன்று தமிழ் மொழிக்கென தனி இணையதளம் ஒன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதில் விக்கிப்பீடியாவில் இருக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் எவ்வித சிக்கலுமின்றி பயன்படுத்திக் கொள்ள முடியும்" என்று நீச்சல்காரன் உறுதியளிக்கிறார்.

தமிழின் வெற்றியை சாத்தியப்படுத்திய தம்பதியினர்

பாலசுப்ரமணியன் - வசந்த லட்சுமி

விக்கிப்பீடியா நடத்திய இந்த போட்டியில் தமிழ் மொழியின் வெற்றியை உறுதிசெய்ததில் சேலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் - வசந்த லட்சுமி தம்பதியினர் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். அதாவது, இந்த போட்டிக்காக தமிழ் மொழியில் மொத்தம் எழுதப்பட்டுள்ள 2959 கட்டுரைகளில் பாலசுப்ரமணியன் 629 கட்டுரைகளையும், அவரது மனைவி வசந்த லட்சுமி 270 கட்டுரைகள் என இந்த தம்பதியினர் மட்டும் 899 கட்டுரைகளை படைத்துள்ளனர்.

சேலம் சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலராக பணிபுரியும் பாலசுப்ரமணியனிடம் இதுகுறித்து கேட்டபோது, "இந்த முறை தமிழ் மொழி வெற்றிபெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நான் வெறும் ஒரு போட்டியில் பெற்ற வெற்றியாக மட்டும் பார்க்கவில்லை. இதன் மூலம், தமிழ் மொழியில் இதுவரை இல்லாத தலைப்புகளில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் நல்ல உள்ளடக்கங்கள் கிடைத்துள்ளன. இது ஆய்வு மாணவர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் மிகவும் பலனளிக்கும்" என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

திரைப்படங்கள், தனிநபர்கள், நாடுகள், வரலாறு ஆகியவை சார்ந்த கட்டுரைகளை படைப்பதில்/ மொழிபெயர்ப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டியதாக கூறும் பாலசுப்ரமணியன், ஒரு நாளுக்கு சராசரியாக ஏழு கட்டுரைகளை இந்த போட்டிக்காக எழுதியதாக கூறுகிறார்.


"அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து அலுவலம் செல்வதற்கு முன்னர் 2-3 கட்டுரைகளை முடித்துவிடுவேன். பிறகு மாலையில் வீடு திரும்பியதும் 3-4 கட்டுரைகளை கடந்த மூன்று மாதங்களாக எழுதி வந்தேன். இதன் மூலம், பல்வேறு தலைப்புகளில் என் அறிவு விலாசமானது மட்டுமின்றி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி கலப்பின்றி தமிழ் மொழியிலேயே பேச வேண்டும் என்ற உத்வேகமும் எனக்கு ஏற்பட்டுள்ளது" என்று கூறும் பாலசுப்ரமணியன் இந்த போட்டிக்காக ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரைகளை எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசை தொடர்ந்து இரண்டு முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் தனக்கு விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்து, அதில் எழுதுவதற்கு ஊக்கமளித்தது தனது மனைவி வசந்த லட்சுமி, இந்த போட்டியில் மூன்றாவது மாதத்தில், அதிக கட்டுரைகளை எழுதியதற்காக மூன்றாவது பரிசை வென்றதாக அவர் பெருமையுடன் கூறுகிறார்.

இந்த போட்டிக்காக 270 கட்டுரைகளை எழுதியுள்ள முதுகலை பட்டதாரியான வசந்த லட்சுமியிடம் இதுகுறித்து கேட்டபோது, "கணவர் பணிக்கு சென்ற பிறகு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் பொதுவாக புத்தகங்கள் படிப்பது, நாடகங்கள் பார்ப்பது உள்ளிட்டவற்றை செய்து வந்த நான் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோது, விக்கிப்பீடியா பற்றிய அறிமுகம் கிடைத்து, அதில் சில ஆண்டுகளாக இயங்கி வருகிறேன். எனக்கு தெரிந்த தலைப்புகளில் எழுதுவது மட்டுமின்றி, புதிய விடயங்களை மொழிபெயர்ப்பதன் மூலம் கிடைக்கும் உணர்வு மனமகிழ்வை உண்டாக்குகிறது" என்று அவர் கூறுகிறார்.

தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்ட ஒவ்வொரு தம்பதியினரும் இதுபோன்று ஏதாவதொரு வகையில் தங்களது பங்களிப்பை செய்தால் அது நிச்சயம் சமூகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் இந்த தம்பதியர்.
Thanks Tamil BBC News

https://www.bbc.com/tamil/india-51582172?at_custom3=BBC+Tamil&at_custom1=%5Bpost+type%5D&at_medium=custom7&at_custom2=facebook_page&at_campaign=64&at_cust

label தமிழ்மொழி முதலிடம் | label other | access_time 21st Fri, Feb 2020



முக்கியச் செய்திகள்
ஜனநாயக கடமையை
பள்ளபட்டி மக்களுக்கு
label News access_time 03rd Fri, May 2019
அரவாக்குறிச்சி கமால்தீன் அவர்களுடைய மணைவி...
மரண அறிவிப்பு
label Janaza access_time 29th Sat, Aug 2020
இடையகோட்டை ஹாஜி.E.A,ஹபீபுர்ரஹ்மான்
மரண அறிவிப்பு
label Janaza access_time 27th Thu, Dec 2018
லிபியாவில் நாடு
அவசியம் படியுங்கள்
label other access_time 07th Sat, Sep 2019
Nowroseppt
Test
label video access_time 07th Wed, Nov 2018